Sunday, April 28, 2019

வரவேற்பு



                   



பள்ளியின் நினைவுகளை ரோஜா மலராக

     சூடியிருக்கும் உங்களுக்கு இந்த கல்லூரி

ரோஜா வனமாக அமைந்திட;

     சுற்றி இருக்கும் அனைவரும் தோழியாக பழகிட;

வேப்பங்காயாய் கசக்கும் தருணத்தையும்

     வெல்லமாக இனிக்கும் தருணமாக மாற்றிட;

இந்த கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்

     நீங்காத நினைவுகளாக மலர்ந்திட!

தாளம் பூவாய் மணந்திட! இன்சுவை நல்கிட!

     குயிலின் குரல் ஆரவாரத்தை கூட்ட

கைத்தட்டல்களையே தாளமாக்கி! எங்கள் அன்பையே

     மல்லிகை மலராகத் தூவி வரவேற்கிறோம்;

சகோதரியாக அல்ல உங்கள் அன்பிற்குறிய தோழியாக!

Sunday, April 14, 2019

அன்பிற்காக ஏங்கும் இரு மனம்


                   அன்பிற்காக ஏங்கும் இரு மனம்  


இங்கோ,
     அந்த பிஞ்சு விரலை கொஞ்சி விளையாடவும்,
     கண்ணத்தில் அன்பு முத்தமிடவும்,
     நிலாச் சோறு ஊட்டி மகிழ்ந்திடவும்,
     குறும்புத் தனத்தை கண்டு ரசித்திடவும்,
     அம்மா என்ற வார்த்தையை செவி வழி கேட்டிடவும்
     ஏங்குது அவளின் உள்ளம்!


அங்கோ,
     கீழே விழுந்தால் தூக்கி விடவும்,
     அன்போடு கொஞ்சி விளையாடவும்,
     பாசத்தோடு கண்டிக்கவும்,
     யாருமில்லாத தனிமை!
     தன்னந்தனிமையில் அன்பைத் தேடி
     தவிக்குது பிஞ்சு நெஞ்சம்!
அவளின் ஏக்கம் இந்த குழந்தைக்கு தெரியவில்லையா?
இல்லை அந்த குழந்தையின் தவிப்பு இவளுக்கு புரியவில்லையா?
ஏன் இந்த இடைவெளி? இவர்களை தடுப்பது எது?
    

Sunday, April 7, 2019

அன்புள்ள அம்மா


                  



அன்பின் வடிவமான கனிவுள்ளம் கொண்டவள் அவள்!

      தன் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திடுவாள்!

முளைத்து விடுவோம் என்னும் எதிர்ப்பார்ப்பில் தான்

     மண்ணுக்குள் புதைகிறது அந்த விதை! ஆனால்

இவளோ தன் குழந்தைக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி

     தன் வாழ்க்கையையே செலவிடுவாள்!

பிள்ளையின் எச்சில் சோற்றையும் அமிர்தம் என உண்டிடுவாள்!

நிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவாள்!

அவளுக்கு தெரியுமா? அந்த நிலவும் ஏக்கம் கொள்ளும்;

     இந்த அன்னையின் அன்பை பெற என்று!

ஒவ்வொன்றிலும் தியாகம் செய்கிறாள்;

     அதிலும் மகிழ்ச்சி தான் அவளுக்கு!

சிலர் வாழ்க்கையில் தான் தியாகம் செய்வார்கள் ஆனால்

     இவளோ தன் குழந்தைக்காக தன்

வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள்!

     மனிதரில் மட்டுமா இந்த அன்பு!

ஒவ்வொரு உயிரிலும் அன்னையின் அன்பு

     அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!

நானும் முயற்சிக்கிறேன் அவள் அன்பை வெல்ல!

     ஆனால் முயன்று முயன்று தோற்கிறேன் அந்த

தோல்வியிலும் சுகம் தான் அவள் மடியில்

     குழந்தையாய் தவழும் போது!


Sunday, March 17, 2019

யார் அவர்?


                                                  



சுகமன சுமையாய் மார்பில் சுமந்து வளர்த்தவர்!

     தொலைநோக்கு சிந்தனைக்கு வித்திட்டவர்!

மிரட்டலில் பயந்து பணிய வைத்தவர்!

     அன்பில் நனைய வைத்தவர்!

தைரியத்தை ஊட்டி வளர்த்தவர்!

     தோள் கொடுத்து வளர்த்த தோழன்!

உன்னால் முடியும்

என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்!

     என்றும் உறுதுனையாக இருப்பவர்;

என்னை நினைத்து என்றும் பெறுமைபடுபவர்!

     நான் செய்யும் தவறை சுட்டி காட்டுபவர்!

என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கை

     அவருக்கு என்றும் இருக்கும்!

அவர் யாராக இருக்க முடியும் என் தந்தையை தவிர?

Thursday, March 7, 2019

வாய்ப்புகளை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

           



விண்வெளியில் கால் பதித்த “கல்பனா சாவ்லாவோ”;

தன் முதுகில் குழந்தையையும் கையில்

வாளையும் சுமந்த “ஜான்சி ராணியோ”;

பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான

     “முத்துலட்சுமி ரெட்டியோ”;

பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான

      “பத்மினி ஜேசுதுரையோ”;

பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான

       “கிரண் பேடியோ”;

வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!

தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை

உருவாக்கி சாதனை என்னும்

சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்

நீ மட்டும் ஏன் பெண்ணே வாய்ப்புக்காக காத்திருக்கிறாய்?

இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக

காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!

Sunday, March 3, 2019

சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;

மண் சாலையாக மாற்றினார்கள்!

மண் சாலையாக இருந்தேன்;

     தார் சாலையாக மாற்றினார்கள்!

தார் சாலையாக இருந்தேன்;

     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!

இப்படி எல்லாம் மாறினாலும் என்

     மேனி மட்டும் குளிகளாலே நிறைந்துள்ளது!

இது நான் செய்த தவறா? இல்லை

என்னை செய்தவர்களின் தவறா?
                                   
                                                                               
                                                                                     இப்படிக்கு,
                                                                       கண்ணீருடன் சாலை.


Sunday, February 24, 2019

எழில் கொஞ்சும் இயற்கை

               




காலையில் கண் விழித்தவுடன் புதிதாய் ஒரு பொழிவு!

ஏதோ ஒரு வெளிச்சம் என் கண்களை வருடிச் சென்றது;

கண்துடைத்து வியப்புடன் புதிதாய் மலர்ந்த சூரிய காந்தியோ?

என்று பறிக்க முயன்று ஏமாற்றத்துடன்  திரும்பினால்;

முன்னே உறைக்காற்று சீறிப்பாய பின்னே சிறகடித்து

பறவை கூட்டம் துறத்தி விளையாடி கொண்டிருந்தது;

உடன் நானும் விளையாட மனம் ஏங்கியது!

ஏக்கத்துடன் தலை குனிந்த போது

இளந்தென்றல் காற்று என் மனதிற்கு இனிமை அளித்து

என்னையும் உடன் அழைத்து சென்றது; அங்கே

ஆர்பறித்து வரும் நீர் ஏதோ முணுமுணுத்து

என்னை கடந்து சென்றது; எட்டிப் பார்த்தால்

கண்ணை கவரும் வெண்முத்து!

கையை விட்டு எடுத்தால் தண்ணீர் மட்டுமே வந்தது!

மேலே பார்த்து உண்மையை உணர்ந்தேன்;

கோபத்துடன், என் மனதில் ஒரு கேள்வி!

நீ தான் இயற்கையோ? ஆனால்

எனக்கு செயற்கையை தான் தெரியும் என்றேன்;

அப்போது, பொருமையாய்,

இயற்கையின்றி செயற்கை உண்டோ?  என்று

நீ சொல்லாமல் சொன்னாய்! நான்

கேட்காமல் உணர்ந்தேன்; திடீரென்று

இனிய குயிலின் குரலோசை என்

செவியை தட்டி எழுப்பியது; அதனால்

நிஜத்தை விட்டு இயற்கையோடு மூழ்கியிருந்த

என் கனவிலிருந்து பிரியா விடைபெற்றேன்!



Sunday, February 17, 2019

தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்


                    




மார்கழி மாத குளிரும்,
பங்குனி மாத வெய்யிலும்
பழகிபோச்சு!
பருவத்தில் இருக்கும்
வித்தியாசம்
மறந்துபோச்சு!

கொட்டும் மழையையும்; அடிக்கும் வெய்யிலையும்
தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துருச்சு;
குடிசை போட காசு இல்லை என்பதால்!

கால் தேய உழைச்சாலும்
இருக்க ஒரு இடம் கிடைக்கவில்லை!
சிலரோ பரிதாப படுகிறார்கள்!
சிலரோ ஏலனப்படுத்துகிறார்கள்!

என்னடா வாழ்க்கை என்றாலும்
இருக்க கூடவா இடம் கிடைக்காது
இந்த உலகில் என்னும் நம்பிக்கையில்
வந்த சிறு நிம்மதியோடு
ஓடுகிறது எங்கள் பகல் பொழுது!

பகலே அதிகம் என நினைத்தானோ
என்னவோ இரவை படைத்தான்
அந்த இறைவன்!
நித்திரையில் நிம்மதியை
தொலைத்தோம் நாங்கள்!

தெருவோரம் கிடக்கும் எங்களை
இறைவனே ஏரெடுத்து
பார்க்கவில்லை!
அந்த வழியே வரும் வாகனம் ஓட்டுபவன்
கண்களுக்கு நாங்கள் குப்பைகளாகவே
தெரிவோம் போல!

அவன் சில நேரங்களில் எருமை வாகனம்
ஓட்டி வருபவனாய் இருப்பதனால்
எமலோகமே கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான்!

உயிரை வருபவர் கையில்
கொடுத்து கண் மூடுகிறோம் - அவன்
மனம் வைத்தால் கண் திறப்போம்!
இல்லையென்றால்;
அவனே பத்திரமாக கொண்டுபோய்
சேர்த்துவிடுவான்;
கைலாசமோ! வைகுந்தமோ!



Sunday, February 10, 2019

பள்ளியின் முதல் நாள்





என்னமோ பட்டப்படிப்பு படிப்பது போல

தேவையானதை எல்லாம் தயார் செய்ததும்!

அ, ஆ போட்டு போட்டு பழகியதும்!

போகும் வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்

செல்வதை தெரியமாய் கையசைத்து கூறியதும்! ஆனால்

பள்ளியில் நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!

காதிற்கு கை எட்டவில்லை என்றாலும் எட்டி எட்டி

     காதை தொட்டு ஏமாற்றியதும்!

அம்மாவின் கையை பற்றி இருக்கும் வரை

     இருந்த அந்த நம்பிக்கை ஆசிரியர் என்

கையை பிடித்து கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக

     இப்படி, கண்களில் கண்ணீர் வடித்த அந்த

பள்ளி முதல் நாள் இன்று நினைத்தால்

     இதழ்களில் புன்னகை தவழ்கிறது!

    



Sunday, February 3, 2019

கல்லூரிக் காலம்






புன்னகை செய்து வரவேற்ற

முகம் தெரியாத தோழிகள்!

பின் உறவென பழகிய நிமிடங்கள்!

     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!

பேசியே கடத்திய பாடவேளைகள்!

     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!

வகுப்பறையில் என்னை கேட்காமல்

     வரும் குட்டித் தூக்கம்!

உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!

     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!

கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட

     இந்த கல்லூரிக் காலம் – இனி

கண் மூடினால் கனவில் மட்டுமே!


Sunday, January 27, 2019

கனவு





கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !

உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை

தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !

எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !

கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த

கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !

சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;

சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !

அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை

முதலில் உன்னில் தான் கண்டானோ !

மனிதனின் நினைவளைகள் நீ என்றால்

உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?

கனவு என்னும் மூன்றழுத்தும் ,

கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

ஆசிரியர்கள்







ஆசிரியர்கள் உன்னை கண்டிப்பது
நீ துன்பப்பட வேண்டும் என்பதற்காக அல்ல;
நீ வாழ்நாளில் வேறு எவராலும் கண்டிக்கப்பட்டுவிட
கூடாது என்பதற்காக தான்!


வேடிக்கையான ஆசிரியர்கள் உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல;
நீ வாழ்நாளில் வேறு எவருக்கும் வேடிக்கையானவள்
ஆகி விடக் கூடாது என்பதற்காகத் தான்!


எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடை அணிவது
நீ பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல;
வாழ்நாளில் நீ எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும்
பகட்டை விரும்பக் கூடாது என்பதகாகத் தான்!


சில ஆசிரியர்கள் பாடத்தை புரியும் படி நடத்துவது பாடத்தை
மட்டும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல;
வாழ்நாளில் உனக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் அதை புரிந்து
எதிர் கொண்டு நடக்க வேண்டும் என்பதற்காகத் தான்!


இந்நான்கையும் உணர்த்தும் எங்கள் ஆசிரியர்கள்
எங்கள் வாழ்வின் நீங்காத நினைவு சின்னங்கள் தான்!
    

பாரதியார்

                     


சீறிவரும் சூறாவளியை
மரங்கள் அறிமுகப்படுத்துவது போல;
தமிழுக்கு உணர்ச்சியூடும் கவிதைகளை
அறிமுகப்படுத்தியவன் நீ!

எதையும் அச்சடித்தாற் போல்
காட்சிபடுத்தும் திறமையை - உன்
வீட்டுச் சுவரில் தொங்கும்
கண்ணாடியிடமிருந்து தான் கற்றாயோ?

உன் வீர முழக்கத்தை, பிஞ்சு குழந்தைகள்
செவி வழி கேட்டாலும்,
அரும்பாத மீசையை தான்
முறுக்கி போருக்கு சென்றிடுமே!

எத்தனை வருமை சுமையாய்
உன்னை வாட்டினாலும்,உன் கைகள்
சுமந்தது என்னவோ புத்தக சுமையைத் தான்!
அந்த யானையும் உன் கவிதையை
கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்;
அந்த வியப்பில் தான் – உன்னை
தூக்கி மகிழ்ந்திருக்கும்; ஆனால்
அதற்கு தெரியுமா நடக்கும்
விபரீதம் என்ன? என்று

உள்ளத்தில் ஒளி உண்டானால்
வாக்கிலே ஒளி உண்டாகும் என்பர்- அதுபோல
நீ எங்கள் உள்ளத்தில் ஒளியாய் நின்று
எங்கள் வார்த்தையிலே ஒளிபொருந்திய
உணர்ச்சி கடலாய் வெளிப்படுகிறாய்!

தமிழே உன் உயிர் மூச்சு என்றாய்!
தமிழ் அன்னை எவ்வளவு காலம் தவமிருந்தாளோ?
உன்னை பெற்றெடுப்பதற்காக என்று தெரியவில்லை!

பாரதி பெண் சுதந்திரத்தின் போர் வாள் நீ!
தமிழுக்குச் செல்ல பிள்ளை நீ!
இந்த உலகை விட்டு உன் உடல் மறைந்தாலும்;
என்றும் எங்கள் மனதில் குடிகொண்டிருப்பவன் நீ!