Sunday, January 27, 2019

கனவு





கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !

உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை

தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !

எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !

கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த

கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !

சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;

சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !

அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை

முதலில் உன்னில் தான் கண்டானோ !

மனிதனின் நினைவளைகள் நீ என்றால்

உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?

கனவு என்னும் மூன்றழுத்தும் ,

கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

ஆசிரியர்கள்







ஆசிரியர்கள் உன்னை கண்டிப்பது
நீ துன்பப்பட வேண்டும் என்பதற்காக அல்ல;
நீ வாழ்நாளில் வேறு எவராலும் கண்டிக்கப்பட்டுவிட
கூடாது என்பதற்காக தான்!


வேடிக்கையான ஆசிரியர்கள் உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல;
நீ வாழ்நாளில் வேறு எவருக்கும் வேடிக்கையானவள்
ஆகி விடக் கூடாது என்பதற்காகத் தான்!


எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடை அணிவது
நீ பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல;
வாழ்நாளில் நீ எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும்
பகட்டை விரும்பக் கூடாது என்பதகாகத் தான்!


சில ஆசிரியர்கள் பாடத்தை புரியும் படி நடத்துவது பாடத்தை
மட்டும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல;
வாழ்நாளில் உனக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் அதை புரிந்து
எதிர் கொண்டு நடக்க வேண்டும் என்பதற்காகத் தான்!


இந்நான்கையும் உணர்த்தும் எங்கள் ஆசிரியர்கள்
எங்கள் வாழ்வின் நீங்காத நினைவு சின்னங்கள் தான்!
    

பாரதியார்

                     


சீறிவரும் சூறாவளியை
மரங்கள் அறிமுகப்படுத்துவது போல;
தமிழுக்கு உணர்ச்சியூடும் கவிதைகளை
அறிமுகப்படுத்தியவன் நீ!

எதையும் அச்சடித்தாற் போல்
காட்சிபடுத்தும் திறமையை - உன்
வீட்டுச் சுவரில் தொங்கும்
கண்ணாடியிடமிருந்து தான் கற்றாயோ?

உன் வீர முழக்கத்தை, பிஞ்சு குழந்தைகள்
செவி வழி கேட்டாலும்,
அரும்பாத மீசையை தான்
முறுக்கி போருக்கு சென்றிடுமே!

எத்தனை வருமை சுமையாய்
உன்னை வாட்டினாலும்,உன் கைகள்
சுமந்தது என்னவோ புத்தக சுமையைத் தான்!
அந்த யானையும் உன் கவிதையை
கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்;
அந்த வியப்பில் தான் – உன்னை
தூக்கி மகிழ்ந்திருக்கும்; ஆனால்
அதற்கு தெரியுமா நடக்கும்
விபரீதம் என்ன? என்று

உள்ளத்தில் ஒளி உண்டானால்
வாக்கிலே ஒளி உண்டாகும் என்பர்- அதுபோல
நீ எங்கள் உள்ளத்தில் ஒளியாய் நின்று
எங்கள் வார்த்தையிலே ஒளிபொருந்திய
உணர்ச்சி கடலாய் வெளிப்படுகிறாய்!

தமிழே உன் உயிர் மூச்சு என்றாய்!
தமிழ் அன்னை எவ்வளவு காலம் தவமிருந்தாளோ?
உன்னை பெற்றெடுப்பதற்காக என்று தெரியவில்லை!

பாரதி பெண் சுதந்திரத்தின் போர் வாள் நீ!
தமிழுக்குச் செல்ல பிள்ளை நீ!
இந்த உலகை விட்டு உன் உடல் மறைந்தாலும்;
என்றும் எங்கள் மனதில் குடிகொண்டிருப்பவன் நீ!